இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவதால் “தேசியத் திட்டமாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி மிகவும் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பிருப்பதுடன், பல இயற்கைப் பாதுகாப்பு அம்சங்கள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பல அரசியல் தலைவர்கள் இந்தப் பெரும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், இயற்கை ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் இத்திட்டத்திற்குப் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காரணம் இந்தத் திட்டத்தால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் எண்ணிலடங்காதவை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நதிகளின் தோற்றம், மனிதன் உட்பட இன்று உலகிலுள்ள பல லட்சம் உயிர்களின் தோற்றத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இயற்கை தனக்கே உரித்தான பல சட்ட திட்டங்களின் படி நதிகளை உருவாக்கியிருக்கிறது. நாம் நினைப்பது போல் எல்லா நதிகளும் கடலில் கலப்பதில்லை. உலகில் பல நதிகள் கடலில் கலக்காமல் காஸ்பியன் கடல், ஆரல் கடல் போன்ற பல பெரிய நன்னீர் ஏரிகளில் கலக்கின்றன. காஸ்பியன் கடல், ஆரல் கடல் போன்றவை உண்மையில் கடல்கள் அல்ல, அவை ஏரிகளே. அவற்றின் மிகப்பெரிய அளவின் காரணமாக அவ்வாறு அழைக்கப்படுகின்றன.
நதிகள் கால்வாய்கள் அல்ல, நாம் நினைப்பது போல் இணைப்பதற்கு. ஒவ்வொரு நதியும் ஓர் உயிர்ச்சூழல் மண்டலம். இப்படிப்பட்ட சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நதிகளில் நாம் செய்யும் எந்த ஒரு வளர்ச்சிப் பணியும் சரி செய்யமுடியாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதற்குச் சிறந்த உதாரணம் நதிகளைத் திசை திருப்பி அழிக்கப்பட்ட ஆரல் கடல்தான்.
1950 மற்றும் 60களில் அன்றைய சோவியத் ஒன்றிய அரசு (USSR) நாட்டின் வறண்ட பகுதிகளில் பெருமளவில் விவசாயம் செய்வதற்கு ஆரல் கடலில் கலக்கும் நதிகளை ஒவ்வொன்றாக திசை திருப்பத் தொடங்கியது. சில ஆண்டுகளில் ஆரல் கடலில் கலக்கும் எல்லா நதிகளும் முற்றிலும் திசை திருப்பப்பட்டன. அதன் விளைவாக உலகின் நான்காம் மிகப்பெரிய நன்னீர் ஏரியான ஆரல் கடல் வற்றத் தொடங்கியது. 1990களில் ஆரல் கடல் தனது முந்தைய பரப்பளவிலிருந்து வெறும் 10%க்கும் கீழ் சுருங்கிவிட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்தது. அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையற்ற திட்டத்தால் உள்ளூர் மீனவர்கள் வேலையிழந்ததுடன் அந்தப் பகுதியின் மொத்தப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்தது. திசை திருப்பப்பட்ட நீரும் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. பருத்தி உற்பத்தியைப் பெருக்க ஒரு வறண்ட பாலைவனப் பிரதேசத்திற்கு திசை திருப்பப்பட்ட நதி நீர், ஆரம்ப நாட்களில் பெரும் விளைச்சலைத் தந்து உலகிலேயே அதிகப் பருத்தி விளையும் பகுதியாக அப்பகுதி விளங்கியது . ஆனால் இது வெறும் குறுகிய காலம் மட்டும்தான் நீடித்தது. காலப்போக்கில் நதிநீர் கால்வாய்களில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாகவும், இயற்கையான நீர் ஆவியாதல் (Evaporation) காரணமாகவும் திசை திருப்பப்பட்ட நதிநீரில் கிட்டத்தட்ட 30 முதல் 75% வீணாகத் தொடங்கியது. காலப்போக்கில் இந்தத் திட்டம் யுனெஸ்கோவால் “உலகின் மிகப்பெரும் சுற்றுச் சூழல் பேரழிவாக” அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்தத் திட்டத்தின் விளைவை உணர்ந்த கஜகிஸ்தான் அரசும் உஸ்பேக்கிஸ்தான் அரசும் அழிக்கப்பட்ட ஆரல் கடலை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக ஆரல் கடல் இருந்த இடம் இன்று “ஆரல்கம் பாலைவனம்” என்றழைக்கப்படுகிறது.
இயற்கை அமைப்புகள் மிகவும் நுட்பமானவை மட்டுமல்லாமல் மனித அறிவும் அறிவியலும் புரிந்துகொள்ள முடியாதவை. இயற்கையின் பல புதிர்களுக்கு இன்னும் விடை காணப்படவில்லை. அப்படியிருக்க நமக்கெல்லாம் வருடம் முழுவதும் நீரைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நதிகளை வளர்ச்சி எனும் பெயரில் சூறையாடுவது பெரும் பேரழிவில்தான் முடியும் என்பதற்கு ஆரல் கடல் ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவில் நதிநீர் இணைப்பு எனும் பெயரில் பெரும் அணைக்கட்டுகளும், நீர்தேக்கங்களும் கட்டப்பட்டால் பெருமளவில் நிலப்பரப்பு நீரினுள் மூழ்கும் நிலை உருவாகும். இதனால் இயற்கையான பெரும் வனப்பகுதிகள் நீர்தேக்கத்தினுள் மூழ்கி வனவிலங்குகளின் வாழ்விடமான காடுகள் நிரந்தரமாக அழிக்கப்படும். தன் வாழ்விடத்தை இழந்த யானை, சிறுத்தை, புலி, மான் போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் வரும். இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனித-விலங்கு மோதல் ஏற்படும் பேராபத்தும் இருக்கிறது.
காடுகள் அழிக்கப்படுவதுடன், பல லட்சக் கணக்கான ஏழை மக்கள் தங்கள் பூர்வீக நிலத்தை விட்டு வேறு இடத்திற்கு உள்நாட்டு அகதிகளாகச் செல்லும் நிலை ஏற்படும். இயற்கை நம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. அது நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கடவுள். சிறிய பட்டாம்பூச்சிகள், எறும்புகள் முதல் பெரும் யானைகள் வரை வாழும் நிலப்பகுதிகளை நம் தேவைக்கேற்ப சூறையாடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. நம்மைப் போலவே அவற்றுக்கும் இந்த நிலப்பரப்பில் வாழ எல்லா உரிமைகளும் உள்ளன, இன்னும் சொல்லப்போனால் நம்மை விட பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அவற்றுக்கே உரிமை அதிகம். ஆனால் மனிதனால் அவை மெல்ல தங்களின் வாழ்விடத்தை இழந்துகொண்டிருக்கின்றன.
புத்தர் கூறியது போல “பூக்களுக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாமல் தேனை உறிஞ்சிக்கொள்ளும் தேனீக்களை போல நாம் இயற்கையைப் பயன்படுத்த வேண்டும்”.
வளர்ச்சி எனும் பெயரில் இயற்கை வளங்களை அழிப்பது ஒரு தற்கொலை முயற்சிதான்.
References:
http://mowr.gov.in/schemes-projects-programmes/schemes/interlinking-rivers
https://www.indiatvnews.com/news/india-pm-modi-rs-5-5-lakh-crore-river-linking-project-ambitious-plan-deal-with-droughts-floods-400170
https://www.downtoearth.org.in/coverage/the-debate-on-interlinking-rivers-in-india-13496
https://timesofindia.indiatimes.com/india/govt-may-declare-inter-state-river-linking-projects-as-national-projects/articleshow/62544432.cms
https://www.jagranjosh.com/general-knowledge/advantages-and-disadvantages-of-interlinking-rivers-in-india-1506409679-1
https://www.geoecomar.ro/website/publicatii/Nr.19-2013/12_mehta_web_2013.pdf
February 25, 2019 — magnon